புதுடில்லி, உலகையே அச்சுறுத்தி வரும் 'கொரோனா' வைரஸ், வரும் நாட்களில், இந்திய விமானம், ஓட்டல், சுற்றுலா துறைகளுக்கு, மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
'இன்று முதல், ஏப்., 15 வரை, ஒரு சில பிரிவினர் தவிர்த்து, அனைவரின் 'விசா' விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா பரவலை தடுக்க எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், விமானம், ஓட்டல், சுற்றுலா துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கெனவே, கொரோனா பீதியால், இந்தியாவிற்கு தினமும் வரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை, 70 ஆயிரத்தில் இருந்து, 62 ஆயிரமாக குறைந்துள்ளது. இது, வரும் நாட்களில், 40 ஆயிரமாக குறையும் என, தெரிகிறது. விமான பயண முன்பதிவுகள் பெருமளவு ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது, விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதால், சர்வதேச விமான சேவை பெருமளவு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை காலத்தில், விமானம், ஓட்டல், சுற்றுலா துறைகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அதற்கு இந்தாண்டு, கொரோனா 'வேட்டு' வைத்துள்ளது.
நுாற்றுக்கணக்கான ஓட்டல் அறைகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயண நிறுவனங்களும், ஏற்கெனவே திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்வதில் சிரமத்தை சந்தித்துள்ளன. புதிய பயணங்களை திட்டமிட முடியாமல் திகைத்துள்ளன.விமான நிறுவனங்கள், ஆட்களை பணிக்கு தேர்வு செய்வதை நிறுத்தியுள்ளன. அத்துடன், அத்தியாவசிய பணிகள் தவிர, இதர பிரிவினருக்கு ஊதியமில்லா விடுப்பு வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளன.
ரூ.8,500 கோடி இழப்புமத்திய அரசின் 'விசா' தடையால், அடுத்த பத்து நாட்களில், விமானம், சுற்றுலா, ஓட்டல் துறைகளுக்கு, நேரடியாக, 8,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்ராஜேஷ் முட்கில், செயலர், இந்திய சுற்றுலா நிறுவனங்கள் கூட்டமைப்பு